சிறிலங்காவை கையாள மாற்று வழிகளைத் தேடவேண்டும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் முன்மொழிவை வரவேற்கின்றோம் -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

பெப்ரவரி 26 இல் தொடங்கிய ஐநா அமர்வுகள் 22 மார்ச்சில் பல வாதப் பிரதிவாதங்களுடன் முடிவுற்றது. ஐ.நாவின் கூட்டத் தொடர் தொடங்கும் போது சிறிலங்கா தொடர்பிலான இடைக்கால அறிக்கையினை வெளியிட்ட மனித உரிமை ஆணையாளரின் பிரசன்னம் இறுதிநாட்களில் இருக்கவில்லை. ஐநா மனித உரிமை ஆணையகத்தால் மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியாது என்பது அல் ஃகுசைன் அவர்களுக்கு நன்றாத் தெரிந்து தான் ஆணையாளர் பதவியில் நீடித்து இருக்காமல் ஓய்வுபெறலாம் என்று சிந்திக்கும் அளவுக்கு நியூ யோர்க்கில் வைத்து கருத்து கூறியிருந்தார்.

சிறிலங்காவிற்கு ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் இம்முறை எந்தவிதமான தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமல் விவாதங்களுடன் மட்டும் ஐநா அமர்வு நிறைவுபெற்றுள்ளது. 2015ம் ஆண்டுத் தீர்மானத்தை (34/1) நிறைவேற்ற ஏதிர்பார்த்த அளவு சிறிலங்கா அரசால் எந்தவிதமான முன்னெடுப்புக்களும் எடுக்கப்படவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

ஐநா அமர்வு 37 இல் சமர்ப்பிக்கப்பட்ட வாய்மூல அறிக்கையில் மனித உரிமைத் துணை ஆணையாளர், ‘சிறிலங்கா’ அரசு, அனைத்துலக மனிதஉரிமை, மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு எதிராக எந்தவிதமான உரிய நடவடிக்கைகளும் எடுக்காதபடியால், நடந்தேறிய மிக மோசமான குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நிபுணர்களைக்கொண்ட ஒரு சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற வாதம் வலுப்பெறுகின்றதென்பதோடு, அப்படியான ஒரு நகர்வு ஏற்படுத்தப்படாதபட்சத்தில் சர்வதேச நாடுகள் ‘ அனைத்துலக நியாயத்தை, மாற்று வழிமுறைகளை பார்க்கவேண்டும் அல்லது அணுகவேண்டும் என அழைப்பு விடுத்திருக்கின்றார். சிறிலங்கா அரசின் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச ரீதியான ஒரு அழுத்தத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்துவதற்கு உறுப்பு நாடுகளுக்கு தாம் அழைப்பு விடுப்பதாக மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனித உரிமை ஆணையாளரின் இந்நிலைப்பாட்டினை ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான வேட்கையில் பெரியதொரு மயில்கல்லாகப் பார்க்க முடியாவிட்டாலும் ஒரு மிகச்சிறிய நம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய முன்னேற்றத்தை இது ஏற்படுத்தியுள்ளது என ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இன்றும் தமிழர்கள் மத்தியில் நெருடிக்கொண்டு இருக்கும் விடயம் தமிழர்கள் தான் பாதிக்கப்பட்ட இனம் என்பதை ஐநாவின் எந்த அறிக்கையிலும் கோடிட்டுச் சுட்டிக்காட்டவில்லை என்பதாகும்.

தற்போது மியன்மாரில் அந்த நாட்டு அரசால் ரொகிங்கியா இனத்துக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மிகமோசமான அத்துமீறல்கள் இனப்படுகொலை என்றும் அவர்கள் ஒரு தனித்துவமான இனம் என்றும் கூறிய ஆணையாளர், மியன்மார் அரசு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால் தமிழர்களுக்கு நடைபெற்றது ஒரு இனப்படுகொலையென்றும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்றும் இன்றுவரை ஆணையாளராலோ அல்லது எந்த ஒரு உறுப்பு நாடுகளாலுமோ வலியுறுத்திச் சொல்லப்படவில்லை என்பது ஒரு வேதனையான விடயமாகும். பாதிக்கப்பட்ட இனம் ஈழத்தமிழர்கள் என்ற உண்மையை, 2015ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானம் திட்டமிட்டு மறைத்ததை, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையால் யெனீவா பத்திரிகையாளர் சங்கத்தில் நடத்தப்பட்ட மாநாட்டில் அன்றே நாம் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இன்று இருக்கும் சூழலில் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக சர்வேதேச குற்றங்களை இழைத்திருக்கும்   சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றத்திலோ அல்லது சிறிலங்கா எல்லையை விட்டு சர்வதேச நாடு ஒன்றிலோ விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து சுயாதீனமான சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேச நாடுகளுக்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வேண்டுகோள் விடுக்கின்றது.

ஈழத்தமிழர் பிரச்சனையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றிற்குக் கொண்டுசெல்லும் அதேவேளை ஜெனிவா மனித உரிமை ஆணையகத்திலும் தெடர்ச்சியாகக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அத்துடன்  தொடர்ச்சியாக சிறிலங்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனிதவுரிமை மீறல்கள், இனங்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபை, தமது அதிகாரிகளை அனுப்பி கண்காணிப்பதோடு அந்த விடயத்தை தொடர்ந்தும் மனிதவுரிமைச் சபையின் ஊடாக அவற்றைத் தடுத்து நிறுத்த ஆவனசெய்வதோடு, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தமது காரியாலயத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதை நாம் வேண்டிக்கொள்கிறோம.;

ஈழத்தமிழ் அமைப்புக்கள் ஏராளமான பக்க அறை நிகழ்வுகளையும் சாட்சியங்களையும் 37வது கூட்டத்தொடரில் ஏற்பாடு செய்திருந்தனர். தாயகத்தில் இருந்தும் பல செயற்பாட்டாளர்களும் காணாமல் ஆக்கப்பட்டோரின் சொந்தங்களும் சாட்சியாளர்களாக சமூகமளித்திருந்தனர். 2009ம் ஆண்டிற்குப் பின் ஐநாவை நோக்கி நீதி கேட்டுப் படையெடுக்கும் ஈழத்தமிழர்களின் தொகை அதிகரித்துக்கொண்டே தான் போகின்றது. ஆனால் ஐநாவால் இன்றுவரை தழிழர்களுக்கு எந்த விதமான ஆக்கபூர்வமான தீர்வையும் முன்வைக்க முடியவில்லை என்னபதே உண்மை.

புகோள நலன் சார்ந்த ஏகாதிபத்தியங்களின் சுயநல அரசியலில் சிக்குண்டு தவிக்கின்றது ஈழத்தமிழினம். இதற்கு துணை போவதுபோல், இந்த சுயநலமிக்க ஏகாதிபந்தியங்கள், மக்கள் பிரதிநிதித்துவமற்ற போலியான சில தமிழ் அமைப்புகளை முன்னிலைப்படுத்தி, தமிழர்களின் அனுசரணை தமக்குண்டு என்ற மாயையை உருவாக்கி, உலக நாடுகளை ஏமாற்றியும் வருகின்றன.  இந்த போலியான தமிழ் அமைப்புகளின் அனுசரணைதான் தொடர்ந்தும் எமக்கு நீதிகிடைப்பதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றதென்பதை தெளிவாக எமது மக்கள் உணர்ந்து, இப்போலி அமைப்புகளை புறந்தள்ள வேண்டிய காலமும் கனிந்து விட்டது.

இலங்கை அரசாங்கம் தான் முன்மொழிந்த தீர்மானத்திலுள்ள (34/1) நான்கு கடப்பாடுகளையும் காலம் தாழ்த்தாது நிறைவேற்ற வேண்டுமென்று தொடர்ச்சியாக கோரிவரும் நாடுகளுக்கும் அனைத்துலக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் எமது நன்றியை தெரிவிக்கின்றோம். அதேவேளையில், அண்மையில் நடந்த இசுலாமிய தமிழர்களுக்கெதிரான தாக்குதல்களை அவதானித்தால், இலங்கை அரசாங்கம் உலக நாடுகளுக்கு தான் கொடுத்த வாக்குறுதிகளை மதிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.  இலங்கை அரசாங்கத்தை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் நிறுத்துவதை தவிர பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு நியாயமான நீதி கிடைப்பதற்கு வேறு வழியில்லையென்பது தெளிவாகிறது.

ஏகாதிபத்தியவாதிகளால் (போத்துக்கீசர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்) முடக்கப்பட்ட தமிழர்களின் இறையாண்மை, ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டு வெளியேறும்போது ஆங்கிலம் தெரிந்த சிங்கள இனவாத அரசியல் வாதிகாளால் தொடர்ந்தும் முடக்கப்பட்டது. சிங்கள இனவாதிகள் கபடத்தனமாக இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடாக மாற்றும் திட்டத்தில் நகர்ந்துகொண்டு இருக்கின்றனர். எனவேதான் தமிழர்கள் இந்த அடிமைத்தளையை உடைத்தெறிந்து தமது பிறப்பரிமையான இறையாண்மையை மீண்டும் வலியுறுத்த வேண்டும்.  தமிழர்களின் தன்னாட்சி, தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகியன அங்கீகரிக்கப்படும் வரை எமது விடுதலை நோக்கிய தாயகப் பயணம் தொடரும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-